சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து பெருந்தொகையான கசுப்பு உற்பத்தி பொருட்கள் சம்பூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில், நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக இயங்கி கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று திங்கட்கிழமை (28) முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது பெருந்தொகையான கசிப்பு மீட்கப்பட்டதாகவும், அங்கு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத செயல்
சம்பூர் - நல்லூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.பீ.டி.சந்திரசிறியின் ஆலோசனைக்கமைவாக சம்பூர் பொலிஸார் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இதன்போது நான்கு பரல்களிலிருந்து கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் கோடா 757 போத்தல், கசிப்பு 31 போத்தல் மற்றும் கம்பிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


