ரவூப் ஹக்கீம் காரணங்கள் சொல்லி ஏமாற்றிவிட்டார் : ஹரீஸ் ஆதங்கம்
நான் வேட்பாளர் ஒப்பம் இடுவதற்கு தந்த வாக்குறுதிகளை ரவூப் ஹக்கீம் காரணங்கள் சொல்லி ஏமாற்றிவிட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (18) மாலை மாளிகைக்காடு வஞ்சிக்கப்பட்டவனின் குரல் எனும் மேடையில் இடம்பெற்ற மாபெறும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மாளிகைக்காடு சந்தியில் ஆரம்பித்து மாளிகா வீதி, கடற்கரை வீதி ஊடாக சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் வரை இளைஞர்கள், பொதுமக்கள் புடைசூழ ஹரீஸ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பொய் வாக்குகள்
ரவூப் ஹக்கீம் தன்னை வேட்பாளர் பட்டியலில் ஒப்பம் இடுவதற்கு தந்த வாக்குறுதிகள், புனானையிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு நடுநிசியில் அழைத்து 'அவர்கள் ஒன்றுக்கும் ஒத்து வருகிறார்களில்லை' என்று தெரிவித்து ஏமாற்றியது என பல்வேறு விஷயங்களை மக்களுக்கு முன் மொழிந்த அவர் மேலும் 'ஒன்றரை வருடமாக உங்களின் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை' என்றும் கூறினார். இவரின் இந்த பேச்சு தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.
இக்கூட்டத்தில் ஹரீஸ் மேலும் கூறுகையில், கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் 10 பேர் இருந்த நிலையில் அதாஉல்லாவிடம் பேசி சாய்ந்தமருது உறுப்பினர்களின் ஆதரவு பெற்று ரஹ்மத் மன்சூரை பிரதி மேயராக்கி அழகு பார்த்தேன்.
அவர் அக்கரைப்பற்று தவத்துடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதுதான் மகா பிழை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னை தொலைபேசியில் அழைத்து, மந்திரித்துமா நீங்கள் எங்களோடு வாருங்கள் உங்களை தேசிய பட்டியலில் அல்லது வேட்பாளர் பட்டியலில் போடுகிறோம் எனக் கூறி அழைப்பு விடுத்தார்.
அவரின் அழைப்பை நான் ஏற்றிருந்தால் இந்த மக்களின் ஆதரவுடன் நான் நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இருந்தும் நான் அதற்கு ஆசைப்படவில்லை.
செய்த சேவைகள்
முஸ்லிம் காங்கிரஸ் பிரபுத்துவ மேட்டுக்குடி தன்மையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? யாரோ ஒருவன் தட்டிக் கேட்க வேண்டாமா? என ஹரீஸ் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் 20ம் திருத்தத்தை ஆதரித்தமை, ஜனாஸா எரிப்பை நிறுத்த செய்த முயற்சிகள் பற்றி மனம்திறந்து பேசினார்.
இந்த "வஞ்சிக்கப்பட்டவனின் குரல்" மேடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தல் வேட்பாளராக இருக்கும் ஏ.ஆர். அமீர் கலந்து கொண்டு ஹரீஸ்க்கு சார்பாகவும், அவருக்கு நடந்த அநீதிக்கு எதிராகவும் உரையாற்றினார்.
இதில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் ஏ.எம்.றக்கீப், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.வஸீர், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெமீல் காரியாப்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |