பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!
சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் உடைத்த தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சில பகுதிகளில் உடைத்த தேங்காய் ஒரு பகுதியின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேங்காய் ஒன்று தற்போது 200 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
உடைத்த தேங்காய் ஒன்றின் விலை
அதேநேரம் உடைத்த தேங்காயின் ஒரு பகுதி 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தற்போது சந்தையில் அரிசியின் விலையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சிவப்பு அரிசி, வெள்ளை அரிசி, என்பவற்றுக்குக் கடந்த சில நாட்களாகத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன்படி, 2 இலட்சம் கிலோகிராம் அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் சதொச நிறுவனங்களுக்கு நாளாந்தம் வழங்குவதற்கு அரிசி ஆலைகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் 2 வாரங்களில் ஒரு மில்லியன் தேங்காய்களை சதொச நிறுவனங்கள் ஊடாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்குத் தீர்வை பெறும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சதொச நிறுவனங்கள் ஊடாக குறைந்த விலையில் தேங்காய்களை வழங்குவதற்குத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |