மட்டக்களப்பிற்கு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பில் சாணக்கியன் அதிருப்தி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (shanakiyan Rasamanickam) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நேற்று (06) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |