மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!
மக்கள் மாற்றத்தை விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ரீ.எம்.ஐயூப்(Iyoob) தெரிவித்தார்.
நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் போராளிகளாக இருந்து கட்சிக்கு உரமூட்டிய எங்களை பலிகொடுத்து எங்களின் ஊர்களுக்கு தேசிய காங்கிரஸ் தலைமையால் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் மக்கள் இம்முறை தேசிய காங்கிரஸை நிராகரிக்க முடிவெடுத்துள்ளார்கள்.
போலியான வாக்குறுதிகள்
அதனால் இசங்கணிச்சீமையில் ஒரு வேட்பாளர் கிடைக்காத நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது.
தேசிய காங்கிரஸ் வேட்பாளராக இசங்கனிசீமை வட்டாரத்தில் போட்டியிட வெளி வட்டாரத்தில் இருக்கும் ஒருவரை நிறுத்தியுள்ளார்கள். இவர்களுக்கு வாக்களிக்க இசங்கனிச்சீமை வட்டாரத்தில் யாரும் தயாராக இல்லை.
மேலும், கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைமையால் அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக இசங்கணிச்சீமை வட்டார மக்களை முழுமையாக ஏமாற்றினார்கள்.
இசங்கணிச்சீமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு விடயங்களிலும், பள்ளிவாசல் காணி விடயங்களிலும் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றினார்கள். இதுபோல மக்களுக்கு போலியான விளம்பரங்களை செய்தார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்தபாடில்லை.
கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற சில்லறை விளையாட்டுக்களை மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள். இவர்களின் போலி முகங்கள் பற்றி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இம்முறை மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை எங்கள் வசமாகும். நாங்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |