நாட்டை விட்டும் வெளியேற எத்தணிக்கும் வைத்தியர்கள்
வைத்தியர்களுக்கான பாதுகாப்பின்மை வலுவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வைத்திய தொழிற்சங்க ஒன்றியம், இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் மீண்டும் வைத்தியர்களின் வெளியேற்றம் கடுமையாக அதிகரிக்குமென்று வைத்திய மற்றும் சிவில் உரிமை தொடர்பான வைத்திய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
வைத்தியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நேற்று(11) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் நிலைபேறான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் கொள்கையைத் தயாரித்து அதனூடாக வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்களின் குற்றச்சாட்டு
அத்துடன் அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாட்டை விட்டு வெளியேறும் கனிஷ்ட, தரம் உயர்த்தப்பட்ட மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளை விட அதிகரிக்கக் கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் 2,000 வரையான வைத்தியர்கள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்கள். கனிஷ்ட வைத்தியர்கள், தரமுயர்த்தப்பட்ட வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் என சகல பிரிவுகளையும் சேர்ந்த வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 31ஆம் திகதியும் வைத்தியத் துறையிலிருக்கும் வைத்தியர்கள் தமது வருமான வரி ஆவணங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.
இந்தப் பின்னணியில் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் வைத்தியர்கள் மத்தியில் மீண்டும் கருத்துகள் வெளிப்பட ஆரம்பமாகியுள்ளன. வைத்தியர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
அரசாங்கத்தின் வரி...
அநேகமாக 40,000 – 80,000 ரூபா என்ற வரையறையிலேயே அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் வரி கொள்கைக்கமைய செலுத்தப்படும் சம்பளத்தில் வருமான வரி குறைப்பும் இடம்பெறுகிறது.
மீதமாகும் நிதி வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருந்தால் அதுவும் வருமான வரிக்கு உட்படுத்தப்படுகிறது. நிலையான கணக்குகளில் நிதி வைப்பிலிடப்பட்டிருந்தால் அதுவும் வருமான வரிக்கு உட்படுத்தப்படுகிறது.
அதேபோன்று, வைத்தியர் ஒருவர் செய்யும் முதலீடுகள் அதாவது காணி கொள்வனவு, வாகன கொள்வனவு அல்லது சொத்துக்களை விற்பனை செய்வதுபோன்ற ஒவ்வொரு செயற்பாடுகளின்போதும் வைத்தியர்கள் பெருந்தொகை நேரடி வரி செலுத்த வேண்டியுள்ளது.
இதன் காரணமாக, மாத இறுதியில் வைத்தியர்களின் சேமிப்பும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதிகரித்துள்ள வரி
வைத்தியராக பணியாற்றுவதற்கு பதிலாக வீதியிலிருந்து யாசகம் செய்தால் இதனை விட அதிகம் உழைக்கக்கூடியதாக இருக்குமென்ற நிலைப்பாட்டிலேயே வைத்தியர்கள் இருக்கிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள வைத்தியர்களால் வரிப்பணம் செலுத்த முடியுமென்றால் ஏன் இலங்கையிலுள்ள வைத்தியர்களால் வரி செலுத்த முடியாது என்றும் ஒரு தரப்பினர் கருத்து வெளியிடுகிறார்கள்.
வெளிநாட்டிலுள்ள வைத்தியர்கள் 40, 50 இலட்சம் ரூபா பெருந்தொகை வரிப்பணத்தை செலுத்தியதன் பின்னர் மிகுதியாகும் பணம் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல போதுமானதாக இருக்கும்.
ஆனால், இலங்கையைப் போன்ற நாட்டில் விசேட வைத்திய நிபுணருக்கும் 03 இலட்சம் ரூபா வரையான அதிகபட்ச சம்பளமே கிடைக்கிறது. இந்நிலையில் அந்த நிதியில் அதிக தொகை பணத்தை வரியாக செலுத்தியதன் பின்னர் அவர்களின் கல்வி, சுகாதாரம், குடும்பத்தாரின் கல்வி, சுகாதாரம், சமூக செயற்பாடுகள், போக்குவரத்து என்ற சகல செலவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு நிதி மீதமாவதில்லை.
அதன் காரணமாகவே இந்த நாட்டில் இருப்பதா இல்லை என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சம்பளத்திற்கு மேலான வரி
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் கொள்கையை தயாரித்து அதனூடான வைத்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாட்டை விட்டு வெளியேறும் கனிஷ்ட, தரம் உயர்த்தப்பட்ட மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடத்தை விட அதிகரிக்கக் கூடும்.
தற்போதும் கிராமிய வைத்தியசாலை கட்டமைப்பு, ஹம்பாந்தோட்டை, கராப்பிட்டி, கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் பேருவளை போன்ற பிரதேசங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளை முன்னெடுத்துச் செல்லுமளவுக்கு போதிய எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இல்லாத நிலைமை நிலவுகிறது.
அந்த நிலைமை மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த அரசாங்கத்தில் 20க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பல்வேறு பதவிகளை வகிப்பதால், வைத்தியர்கள் தொடர்பில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |