உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறப்போகும் மட்டக்களப்பு: ரணில் தெரிவிப்பு
உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு- கல்குடா பிரதேசத்தில் நேற்று (08) முற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஶ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வலயம்
மேலும் தெரிவிக்கையில், இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம். மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம்.
கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம்.டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம்.
கல்குடாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்றை இங்கு உருவாக்குவேன்.
ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். இப்பகுதிக்கு வர அது இலகுவாக இருக்கும். சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பயிற்சிகளை வழங்குவோம்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி
சம்பிரதாய நடனங்கள், கப்பிரிங்ஜா, சம்பிரதாய முஸ்லிம் நடனங்கள், நவீன நடனங்கள், வாத்தியக் குழுக்கள், சுவையான உணவுகள் என பல விடயங்கள் எமக்குத் தேவைப்படும். அவ்வாறு தான் சுற்றுலாத்துறை முன்னேறும்.இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் "இயலும்". சஜித்தினால் அல்லது அநுரவினால் அதனை செய்ய முடியுமா.
கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேசும் இல்லை சுற்றுலாத்துறையும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |