மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன் ..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (20) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டார்.
சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை
இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை மீதான முடிவு இன்று அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாத்தறை வெலிகமவில் பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொலை செய்யச் சதி செய்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி அவரைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அவரது சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவைப் பெறுவதற்குச் சென்றிருந்தபோதே முன்னாள் பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தகக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |