நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல்
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கட்சி என்ற ரீதியில் நாம் வலுவாக இருக்கின்றோம், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவி வகித்த போதும் சிலர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர்.
குற்றம் சுமத்தப்பட்டது
ராஜபக்சக்கள் காரணமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு உதவுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டது, தற்பொழுது ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) பேசி தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) மற்றும் ரிசாட் பதியூதீன் (Rishad Bathiudeen) போன்றோருக்கு பேசி உதவி பெற்றுக்கொள்ள முடியும்.
மொட்டு கட்சியின் சிங்கள பௌத்த வாக்கு அடிப்படையினால் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் ஜனாதிபதியுடன் இணையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது. தற்பொழுது அனைத்து தரப்பினரும் பேசி அவர்களது ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும்.
எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட எம்மாலும் முடியும், எனினும் அவ்வாறு செய்து அவர்களின் நிலைமைக்கு கீழே இறங்க நாம் விரும்பவில்லை. தேர்தலின் போது மக்கள் யாருடன் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும்.
அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை சில அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகின்றனர், இவ்வாறான ஓர் பின்னணியில் அரசியல்வாதிகளை தாக்கி வீடுகளை எரிப்பது நியாயமானது“ என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |