தவறான அடையாளம் : அஸ்மானின் சகோதரரால் தொடுக்கப்பட்ட வழக்கு
நியாயமற்ற முறையில் தவறாக பயன்படுத்தப்பட்டு பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி, மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரைக் கொண்ட நபரின் குடும்பத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதாள உலகத் தலைவராகக் கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைதான அஸ்மான் ஷெரிப்தீன் எனும் பெயர் கசிவை தொடர்ந்து இந்த வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இது தொடர்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உண்மையான முகமது அஸ்மான் ஷெரிப்தீனின் சகோதரர் தாக்கல் செய்துள்ளார்.
பொய்யான அடையாளம்
மேலும், இந்தக் கொலை தொடர்பாக பெப்ரவரி 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்தப் பெயரைக் கொண்ட உண்மையான நபர் அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் நுவான் ஜெயவர்தனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தாசுன் பெரேரா, பொலிஸார் மற்றொரு நபரை தடுத்து வைத்திருப்பதாகவும், முகமது அஸ்மான் ஷெரிப்தீனும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் இரண்டு வெவ்வேறு நபர்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தவறான அடையாளம் ஷெரிப்தீனின் குடும்பத்துக்கு சட்ட மற்றும் சமூக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கான பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்கவும் நீதிமன்றத்தை வழக்கறிஞர் கோரியுள்ளார்.
இந்த நிலையில், சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாததால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரது கட்சிக்காரர் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்திய தகவல்களின்படி, 'கணேமுல்லே சஞ்சீவ' கொலைக்குப் பின்னணியில் இருந்த 'கெசல்பத்தர பத்மே', என்பவர் எனவும், இது தொடர்பான அனைத்தையும் இத்தாலியில் இருந்து அவர் இயக்கியதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |