நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார
Rakshana MA
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, இன்று (13) இரவு இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனவரி 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சீன பிரதமர் லீ சியாங் மற்றும் இராஜதந்திரிகள் குழுவை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த சீன விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தொழில்நுட்ப மற்றும் விவசாய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் பல உயர்மட்ட வர்த்தக கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக பல களப்பயணங்களில் பங்கேற்க உள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில், பல இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இது என்பதும் விசேட அம்சமாகும்.
எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த விஜயம் மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |