மருதமுனையில் நடைமுறைக்கு வரும் திட்டங்கள்..பிரதேச மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்
மருதமுனை (Maruthamunai) பிரதேச மக்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வாழும் மக்களுக்கான அறிவித்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
துண்டுப்பிரசுரம்
அதன்படி, குறித்த துண்டுப்பிவுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த காலங்களில் நமது ஊரின் செயற்பாடுகள் பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்ததனை தாங்கள் அறிவீர்கள்.
குடும்பப் பிரச்சினைகளும் மக்களுக்கிடையிலான பிணக்களும் குடும்பமட்டத்திலும் பள்ளிவால்கள் மட்டத்திலும் பெரும்பாலும் தீர்த்துக்கொள்ளப்பட்டன.
இதன் பின்பே பிரச்சனைகள் பொலிஸ் நிலையங்களுக்கும் காதி நீதிமன்றங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.
ஆனால் தற்போது இச்செயற்பாடுகளின் நிலை மாறி சிறு பிரச்சினைகள் கூட குடும்பம் பள்ளிவாசல்களைக் கடந்து அதற்கு அடுத்தமட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இவ்விடயங்கள் பொலிஸ் நிலையம் இணக்க சபை நீதிமன்றம் என பல வருடகாலங்களுக்கு நீண்டு செல்வதனையும் அதிகமான பணமும் நேரமும் விரயமாவதனையும் இலகுவாக தீர்க்கக் கூடிய சிறு பகைகள் பெரிதாக வளர்ந்து நிற்பதனையும் தாங்கள் அறிவீர்கள்.
அமையத்தின் செயற்பாடுகள்
ஊர் செயற்பாடுகளையும் நமது ஊர் இளைஞர்களின் நடவடிக்கைகளையும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரும் நோக்குடன் மருதமுனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஒன்றிணைந்து மருதமுனை அனைத்து பள்ளிவாயல்கள் அமையம் எனும் பெயரில் ஒரு பொது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் கடந்த 18ஆம் திகதி மஸ்ஜிதுர் றஹ்மத் பள்ளிவாசலில் கல்முனை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கல்முனைப் பிரதேச காதி நீதிபதி, மருதமுனை பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைவர் செயலாளர்கள் பங்கு பற்றிய ஒரு கூட்டம் நடாத்தப்பட்டு கீழ்வரும் ஆரம்ப முடிவுகள் எட்டப்பட்டன என்பதனை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
1. அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப் பதற்காக மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் அலுவலகம் ஒன்றினைத் திறத்தல்.
2. மாணவர்கள் இரவு 10.00 மணிக்குப் பின்னர் அவசர அவசிய காரணங்களின்றி வெளியில் நடமாடுவதை தடுத்தல். இவ்வாறு தகுந்த காரணங்களின்றி இரவு 10.00 மணிக்குப் பின்னர் வீதிகளில் நடமாடும் மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படுவார்கள்.
பின்னர் அம்மாணவர்கள் வதியும் பள்ளிவாசல்களின் நற்சான்றுக் கடிதத்துடன் பெற்றோர்கள் பொலிஸ் நிலையம் சென்றே இவர்களை அழைத்து வருதல் வேண்டும். இவ்விடயம் (24.05.2025ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்)
3. அவசியமின்றி இரவு 11.00 மணிக்குப் பின்னர் மருதமுனைப் பிரதேசத்தில் திறந்திருக்கின்ற கடைகளினை எதிர்காலத்தில் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருதல்.
4. சாரதி அனுமதிப்பத்திரமின்றியும் தலைக்கவசம் இன்றியும் இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பிய வண்ணம் மோட்டார் சைக்கிள்களில் இரண்டுக்கு மேற்பட்டோர் உலா வருவது தொடர்பாக எதிர்காலத்தில் பொருத்தமான செயற்திட்டம் ஒன்றினை வகுத்து செயற்படுத்துதல்.
கட்டுப்பாடுகள்
5. இலகுவாக தீர்வு காணக்ககூடிய சிறு பிணக்குள். குடும்ப மட்டத்தில் அல்லது பள்ளிவாசல்கள் மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவு படுத்தல்.
இவ்வாறு தீர்வு எட்டப்படாத பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையத்தினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக்குழுவின் ஊடாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.
இக்குழு வாரம் ஒரு முறை கூடி இயலுமான வரை பள்ளிவாசல்கள் மட்டத்தில் இப்பிரச்சனைகளுக்கு தீரவு காண முயலும். இதன் பின்பே பிரச்சினைகள் ஏனைய மட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.
அதேபோல் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்படுகின்ற சிறு பிரச்சனைகளும் ஆரம்பத் தீர்வுக்காக இந்நல்லிணக்கக் குழுவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு பொலிஸ் நிலையத்தினால் ஆலோசனைகள் வழங்கப்படும்.
6. குடும்பங்களுக்குள் ஏற்படுகின்ற சிறு குடும்பப் பிரச்சனைகள் குடும்ப மட்டத்திலும் அப்பிரதேச பள்ளிவாசல்கள் மட்டத்திலும் தீரத்துக்கொள்ளப்படல் வேண்டும்.
இங்கு தீர்வு பெறப்படாத பிரச்சனைகள் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல் அமையத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடும்ப நல்லிணக்க குழுவினால் தீர்வு எட்டப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கும் தீர்வு எட்டப்படாத பிரச்சனைகளே காதி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆலோசனை வழங்கப்படும்.
அதேபோல் நேரடியாக காதி நீதிமன்றம் செல்கின்ற பிரச்சனைகளும் காதி நீதிபதியினால் இறுதி சமரச முயற்சிக்காக மருதமுனை அனைத்துப் பள்ளிவாயல்கள் அமையத்தியத்தின் கீழ் இயங்கி வருகின்ற குடும்ப நல்லிணக்கக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்பே இறுதி தீரமானம் எடுக்கப்பட வேண்டுமென உடன்பாடு காணப்பட்டுள்ளது.
7. வெளியூர்களில் இருந்து மருதமுனைப் பிரதேசத்திற்கு வந்து வீடு வாடகைக்கு பெற்று வசிப்பவர்கள். அவர்கள் வசித்து வந்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களிலிருந்து நற்சான்றுப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுவந்து வீடு வாடகைக்க பெறப்போகின்ற பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சமர்ப்பித்தல் வேண்டும்.
இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக பள்ளிவாசல்கள் பொலிஸ் நிலையத்திற்கும் கிராம சேவகர்களுக்கும் அறிவித்தல் வேண்டும்.(தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக இவ்விடயத்தில் வீடு வாடகைக்கு வழங்குபவர்கள் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்படுகின்றது)
முழுமையாக ஊரினதும் நமது ஊரில் வாழும் இளைஞர்களினதும் மாணவர்களினதும் எதிர்கால நலன் கருதி எட்டப்பட்டுள்ள இவ் ஆரம்ப முயற்சிக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு மதிப்பிற்குரிய பெற்றோர்களினையும் சமூக ஆர்வலர்களையும் மற்றும் இளைஞர்களையும் மாணவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், அண்மையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருடன் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
இதன்போது, மருதமுனையின் தற்போதைய நிலை, மாணவர்கள் நலன், இளைஞர்களின் போக்கு, மருதமுனையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




