அக்கறைப்பற்று வாள்வெட்டு சம்பவம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்
அக்கறைப்பற்றில் (Akkaraipattu) இடம்பெற்ற அதிபர் மற்றும் ஆசிரியர் மீதான வாள் வெட்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (26) திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 23ஆம் திகதி அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாணவியொருவரின் சகோதரியின் காதலனால் பாடசாலை அதிபர் மற்றும் ஆசியரியர் ஆகியோர் வாள் வெட்டுக்கு இலக்காகியிருந்தனர்.
ஆசிரியர்கள் மீதான தாக்குதல்
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னால் ஒன்று கூடுமாறு அதிபர் அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவித்தல் செய்யும் நடவடிக்கையை ஆசிரியர் ஒருவர் முன்னெடுத்துள்ளார்.
அதன்படி சம்பவ தினமான 23ஆம் திகதி மாலை குறித்த மாணவியின் வீட்டிற்கு தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார்.
பயிற்சி செயலமர்வு தொடர்பில் அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மாணவியின் சகோதரியின் காதலன் ஆசிரியரை தாக்கிவிட்டு மோட்டர் வாகனத்தினையும் தாக்கியுள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நிலைமை எல்லை மீறியதால் தனக்கு இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அதிபருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த ஆசிரியரை காப்பாற்ற சென்ற அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் ஆசிரியர் மற்றும் அதிபர் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டதுடன், தாக்குதல் நடத்திய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்னால் காலை 9.00 மணிக்கு ஒன்று திரண்டனர்.
இதன் போது யார் தருவர் ஆசிரியர்களுக்கு உத்தரவாதம், ஆசிரியர் மீது அன்பு காட்டு, வஞ்சனை தவிர்த்து வழி காட்டியை மதிக்கலாம், கல்விச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள், பாதுகாப்பு வேண்டும் ஆசிரியர் அதிபர்களுக்கு, அழிக்காதே அழிக்காதே கல்வி சமூகத்தை அழிக்காதே, அறம்வழி நடப்போம் அதிபர் ஆசிரியர் பெருமை காப்போம், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோலில் மணிக் கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







