ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த பதற்றம் மற்றும் தொடர் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. இதற்கு, தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கியக் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல்
இந்த குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் மறுத்து வந்தனர்.
இந்தப் பதற்றத்தின் உச்சகட்டமாக, பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களில் இரு தரப்பிலும் இராணுவ வீரர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், முதலில் கட்டார் தலையீட்டில் 48மணி நேர போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டபோதிலும், அதை மீறி பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் கட்டார் தலைநகர் தோஹாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன், கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்டக் குழுக்கள் கலந்துகொண்டன.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டதாக கட்டார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், எல்லையில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கவும், போர் நிறுத்தத்தை நம்பகமான முறையில் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து சந்திப்பதாகவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இத்துடன், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நிலவி வந்த அபாயகரமான பதற்றம் தணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |