யாழில் மின் மோட்டாரைத் திருத்த முற்பட்ட ஆலயப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - சுன்னாகம், சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், வீடொன்றில் மின் மோட்டார் திருத்தச் சென்ற நிலையில் உயரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று(23) உயிரிழந்துள்ளதுடன் சடலம் இன்று(24) உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்
திருவிழா நடைபெற்று வரும் இந்து ஆலயத்தின் அருகில் உள்ள வீடொன்றில் மின் மோட்டார் இயங்காத காரணத்தால் ஆலயத்தில் பிரசாதம் தயாரித்துக்கொண்டிருந்த நபரை வீட்டின் உரிமையாளர் அழைத்து, மின் மோட்டார் திருத்துமாறு கேட்டுள்ளார்.
இதன்போது, அந்த நபர் மின் திருத்த வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் டெஸ்ட்டரை எடுத்துக்கொண்டு வருமாறு வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவர் வீட்டினுள் சென்று டெஸ்ட்டரை எடுத்துக்கொண்டு சென்று பார்த்தபோது, மின் மோட்டார் திருத்துவதற்காக வந்த நபர் தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.