அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் தமக்கு இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் ஏற்பட்டிருக்காது.
அதே போன்று, வைத்தியத் தொழிலை விசேட சேவைப் பிரிவாகக் கருதி நிபுணத்துவ வைத்தியர்கள், தர வைத்தியர்கள் மற்றும் நிர்வாகத் துறையிலுள்ள வைத்தியர்களை இனங்கண்டு அவர்களுக்கு விசேட சம்பளக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்ததாகவும், அது நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டு ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், டெட் கொடுப்பனவை இற்றைப்படுத்தல், மேலதிக கடமைக் கொடுப்பனவை நிரந்தரக் கொடுப்பனவாக மாற்றி அதனை சம்பளத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் திறைசேரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது, மேற்குறிப்பிட்ட விடயங்களை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதற்கும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என வைத்தியர் பிரபாத் சுகததாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அவசர நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது எனவும், தமது சங்கம் நோயாளர்களின் உயிரை ஆபத்தில் வீழ்த்தாது எனவும் வைத்தியர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் இடம்பெற்ற அடையாள பணிப்புறக்கணிப்புக்கும் உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், தமது சங்கம் சில வழிமுறைகளின் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி.
1.கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை.
2. வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் செய்துகொள்வதற்காக துண்டுச் சீட்டுகள் அல்லது பரிந்துரைகளை வழங்காமை.
3. தற்போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாவிடின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படாதவிடத்து, வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை.
4. சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை.
5. ஏதேனும் ஒரு வைத்தியசாலையில், கிளினிக்கில் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளியை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக, உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்காவிடின் வைத்தியர்கள் அந்த இடங்களில் கடமையிலிருந்து விலகுதல்.