முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகவும் சரியானதாகும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால்தான் இலங்கை இன்னொரு வெனிசுலாவாக மாறாமல் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்தது.
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு
எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
அத்துடன், மத்திய கிழக்கில் எதிர்பாராத பதற்ற சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய தயார் நிலையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று விசேட குழுக்களை நியமித்துள்ளார்.
ஒரு குழு நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும், மற்றொரு குழு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பொருளாதார நிலை குறித்தும் செயற்படுகிறது.
இரண்டு குழுக்களையும் கண்காணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |