திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்
திருகோணமலையில் (Trincomalee) சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அதன்படி, திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக பதிவான துரதிர்ஷ்டவசமான சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது
இந்த சம்பவத்திற்கு உடனடி பதில் அளிக்கப்பட்டதாகவும், ஒரு சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அத்தோடு, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியை உறுதி செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஹேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இரவு (07) அலஸ்வத்த பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை தகாத முறையில் தொட முயன்ற ஒருவரை குறித்த பெண்ணின் கணவர் விசாரிக்க சென்ற போது தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக உப்புவேலி பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
மேலும் சந்தேக நபர் இன்று (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |