திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றநிலை
திருகோணமலையில் நேற்றிரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படும் என்று கூறப்பட்டதால்தான் அது அங்கிருந்து அகற்றப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் அந்த புத்தர் சிலை வைக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17 இது தொடர்பில் விளக்கமளித்தும் பேசும் போதே இதனை தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புத்தர் சிலைக்கான பாதுகாப்பு
அத்துடன் புத்தர் சிலைக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த சிலை விகாரை அறநெறிப்பாடசாலையின் அதே காணியில் மீண்டும் வைக்கப்படும்.இனி இப்படியான துரதிர்ஷ்டவமான சமபவங்கள் நடக்காது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால்,அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.நீதிமன்ற தீர்ப்பின் படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் பதற்றமான சூழ்நிலை
அது தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்த நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என கூறினார்.

இந்நிலையில், திருகோணமலையில் அமைந்துள்ள குறித்த விகாரையை இடிப்பதற்காக மாநகர சபை பெகோ இயந்திரம் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த பகுதியில் பொலிஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதனால் திருகோணமலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.