அல்லாஹ் விசாரிக்கும் மனிதர்கள்
ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, அல்லாஹ்வினால் நியமனம் செய்யப்பட்ட விசேஷமான சில மலக்குகள் திக்ரு செய்பவர்களை தேடிக்கொண்டு உலகின் பல பாகங்களிலும் சுற்றித் திரிகின்றனர்.
எங்கேனும் ஓரிடத்தில் திக்ரு செய்பவர்களைக் கண்டால், அவர்களில் ஒருவர் மற்றவர்களை உங்களுடைய தேவையின் பக்கம் வாருங்கள் என்று கூவியழைத்து, அனைவரும் ஒன்றாக கூடி திக்ரு செய்பவர்களை தங்களுடைய இறகுகளால் மூடிக்கொண்டு வானுலகம்வரை சூழ்ந்து கொள்கின்றனர்.
திக்ரு செய்பவர்கள் கலைந்து சென்றுவிட்டபின் அந்த மலக்குகள் வானுலகிற்கு அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு செல்கிறார்கள்.

அனைத்தும் அறிந்த அல்லாஹ் அவர்களிடம் ”நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என வினவுகிறார்கள். அதற்கு அந்த மலக்குகள் ”உன்னை தஸ்பீஹ், தக்பீர், தஹ்மீத் செய்து கொண்டிருந்த உன்னுடைய அடியார்களிடமிருந்து வருகிறோம்” என்று கூறுவார்கள்.
”அவர்கள் என்னை பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். ”இல்லை, அவர்கள் உன்னை பார்த்தில்லை” என்று கூறுவார்கள். அவர்கள் என்னை பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? என்று கேட்பான்.
உன்னை பார்த்திருந்தால், அதிகமாக உன்னை வணங்குவார்கள். அதிகமாக உன்னை போற்றிப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்வதில் மூழ்கிவிடுவார்கள் என்று கூறுவார்கள்.
”அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்”? என்று அல்லாஹ் கேட்பான். ”சொர்க்கத்தை வேண்டுகிறார்கள்” என்று கூறுவார்கள். அவர்கள் சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா? என்று கேட்பான். இல்லை என கூறுவார்கள்.
அவர்கள் சொர்க்கத்தை பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள் எனக் கேட்பான். சொர்க்கத்தை பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக ஆசையுடனும் தேட்டத்துடனும் ஆர்வத்துடனும் அதனை அவர்கள் வேண்டுவார்கள் என்று கூறுவார்கள்.
அவர்கள் எதைவிட்டு பாதுகாப்பு தேடுகிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். அவர்கள் நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடுகிறார்கள் என்று கூறுவார்கள்.
அவர்கள் அதனை பார்த்திருக்கிறார்களா எனக் கேட்பான். இல்லை என கூறுவார்கள். அதனை பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள் என கேட்பான்.
அதனை பார்த்திருந்தால் அதை விட்டு அதிகமாக வெருண்டோடி, அதிகமாக பயப்படுவார்கள் என கூறுவார்கள்.

அப்பொழுது அல்லாஹ், நான் அவர்கள் அனைவரையும் மன்னித்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறுவான்.
அப்பொழுது ஒரு மலக்கானவர், ”யா அல்லாஹ் அந்த கூட்டத்திலிருந்த இன்ன மனிதன் தன்னுடைய சொந்த தேவைக்காக அங்கு வந்திருந்தான். திக்ரு செய்வதற்காக வரவில்லையே? என்று கேட்பார்.
அதற்கு அல்லாஹ் ”அந்த கூட்டத்தினர் எவ்வளவு புனிதமானவர்களென்றால், அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பவனும் துர்ப்பாக்கியவானாகி விடமாட்டான்(அவனையும் நான் மன்னித்துவிட்டேன்) என்று கூறுவான்.