சிறு கலிமா பெருநன்மை
அன்னை ஜுவைரிய்யா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, திரு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுவதற்காக வீட்டை விட்டுச்சென்றார்கள்.
அப்பொழுது அன்னை அவர்கள் தங்களுடைய முஸல்லாவிலிருந்து (தஸ்பீஹ்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.
நபி(ஸல்) லுஹாத் தொழுகைக்கு பிறகு திரும்பி வந்த போது அன்னை அவர்கள் அதே நிலையில் அமர்ந்திருந்தார்கள்.
நான் உம்மை விட்டுச் சென்றதிலிருந்து அதே நிலையில் தான் அமர்ந்திருக்கிறீரா? என்று கேட்டார்கள். ஆம்! என அவர்கள் பதில் கூறினார்கள்.
அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ”நான் உம்மைவிட்டுச் சென்ற பின் நான்கு கலிமாக்களை மூன்று தடவை கூறினேன். அவற்றையும் நீர் காலையிலிருந்து இதுவரை ஓதியதையும் எடை போட்டால் நான் ஓதியது நீர் ஓதியதைவிட அதிகக் கனமுள்ளதாக இருக்கும் அது.
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத கல்கிஹி, வரிளா நப்ஸிஹி வஜினத அர்ஷிஹி, வமிதாத கலிமாத்திஹி
என்னும் கலிமாவாகும் என்று கூறினார்கள்.

பொருள்
நான் அல்லாஹ்தஆலாவை அவனுடைய புகழைக்கொண்டு பரிசுத்தப்படுத்துகிறேன். அவனுடைய படைப்பினங்களின் எண்ணிக்கையளவுக்கு, அவனுடைய திருப்பொருத்தத்திற்கு தக்கவாறு, அவனுடைய அர்ஷ் உடைய எடைக்கு சமமாகவும் அவனுடைய கலிமாக்களின் எண்ணிக்கை அளவுக்கு.