மூதூர் சந்தையை அசிங்கப்படுத்தும் வியாபாரிகள் – கவனக்குறைவாக உள்ள மூதூர் பிரதேச சபை
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பேருந்து தரிப்பிடப் பகுதியை மையமாகக் கொண்டு, பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வரும் வார சந்தை தற்போது கடுமையான சுகாதார பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
சந்தை பகுதியில் சுகாதார நெறிமுறைகள் பெருமளவில் மீறப்பட்டு வரும் நிலையில், வியாபாரிகள் தங்கள் விற்பனையை முடித்தவுடன் பொலித்தீன் பைகள், கண்ணாடி போத்தல்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வாழை இலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு இழைக்க முடியாத கழிவுப்பொருட்களை அந்த இடத்திலேயே எறிந்து விட்டு செல்கின்றனர்.
திருத்தமான நடவடிக்கைகள்
தற்போதைய மழைக்காலத்துடன் இணைந்து, இந்த கழிவு பொருட்களில் நீர் தேங்கி நுளம்புகள் பெருகும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதை சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இந்தக் கழிவுப்பொருட்களை உணவாக தேடி மாடுகள் சந்தை பகுதியினுள் நுழைந்து சுற்றுப்புறத்தை அசிங்கப்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்த சந்தை நிலப்பரப்பு மூதூர் பிரதேச சபைக்கு சொந்தமானது என்றாலும், இந்த மோசமான சுகாதார பிரச்சினைகள் குறித்து அவை எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளாத நிலை காணப்படுவது பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
முன்னதாக பல முறை மூதூர் சுகாதார வைத்திய பரிசோதனை அதிகாரிகள் சந்தை பகுதியை பார்வையிட்டு, கடுமையான சுகாதார சீர்கேடுகள் இருப்பதை கண்டறிந்து, பிரதேச சபைக்கு எழுத்து மூலம் தகவல் கொடுத்திருந்தனர்.
இருப்பினும், இதற்கான திருத்தமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி நூர் முகம்மது கஸ்சாலி தெரிவித்துள்ளார்.
சந்தை பகுதியின் சுகாதார நிலை நாள் குறிக்கும் போதே மோசமடைந்து வருவதால், இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சந்தை பகுதியை சுத்தம் செய்து, சுகாதார நெறிமுறைகளை பின்பற்றும் நடவடிக்கையை பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் என்று மூதூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.