ஒரு வருடம் பதவியை வழங்குங்கள் : மாவடிப்பள்ளி மக்கள் கோரிக்கை
காரைதீவு(Karaitivu) பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் தவிசாளர் ஜாஹிர் ஒரு வருடமாவது பட்டியல் உறுப்பினர் பதவியை மாவடிப்பள்ளிக்கு வழங்க வேண்டும் என மாவடிப்பள்ளி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ள சுயேட்சை குழு ஆசனத்தை ஒரு வருடமேனும் மாவடிப்பள்ளிக்கும் வழங்க வேண்டும் என மாவடிப்பள்ளி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை
தையல் இயந்திரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு போதியளவு வாக்கு பெறாமையினால் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தை இழந்திருந்தது. அதில் பிரதான வேட்பாளர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் மாளிகைக்காடு மாவடிப்பள்ளி பிரதேச மொத்த வாக்கு அடிப்படையில் குறித்த பட்டியல் (போனஸ்) ஆசனமொன்று கிடைத்திருந்தது.
இந்நிலையில், கடந்த காலங்களில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் மாவடிப்பள்ளி வாக்குகளைப் பெற்றும் எந்த விதமான பட்டியல் ஆசனங்களையும் கொடுக்கவில்லை என்ற ஐயப்பாடு மக்களிடத்தில் வெகுவாக பரவியது.
இருந்தும் இம்முறையும் மாவடிப்பள்ளி வாக்காளர்களினை கறிவேப்பிலையாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அப்பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அந்த அடிப்படையில் இந்த ஆசனம் ஒரு வருடமேனும் மாவடிப்பள்ளிக்கும் வழங்கப்பட வேண்டும். அது மாவடிப்பள்ளி சுயேட்சை குழு வேட்பாளர் எம்.ஆர்.எம்.மர்ஷாத் இற்கு பிரதேச சபையினால் வழங்கப்பட வேண்டும்.
ஆசனத்திற்கான போட்டி
மாளிகைக்காடு கிராமத்திற்கு ஏலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சை என்று மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மாவடிப்பள்ளிக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைக்கப்பெற்றது.
எனவே அந்த ஆசனத்தில் ஒரு வருடமாவது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் இனால் மாவடிப்பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும்.
மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் 479 வாக்குகளை பெற்று சுயேட்சை அணித்தலைவர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் பட்டியல் (போனஸ்) ஆசனத்தைப் பெற்றுள்ளார் .
ஆகவே சுயேட்சை குழு தலைவர் இதனை உணர்ந்து இந்த ஆசனத்தை மாவடிப்பள்ளிக்கும் தாராள மனம் கொண்டு ஒரு வருடமும் வழங்க வேண்டும் என அப்பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |