யாழில் தீக்கிரையாக்கப்பட்ட குடும்பஸ்தரின் வீடு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் உள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தாளையடி தபால் நிலைய உழியரான விஜயகுமார் கணேஷ் என்பவருடைய வீடே இவ்வாறு விசமிகளினால் நேற்று (07.08.2024) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் அரச காணி ஒன்றில் தற்காலிகமாக வீடு அமைத்து வசித்துவரும் குடும்பஸ்தர் கடும் குளிர்காரணமாக தனது தாய் வீட்டிற்கு சம்பவ தினமன்று சென்றுள்ளார்.
கட்டுப்படுத்தப்பட்ட தீ
இரவு 09.00 மணியளவில் காணிக்குள் அத்துமீறி நுழைந்து குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீவைத்து விட்டு விசமிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்த பொதுமக்கள், குடும்பஸ்தருடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குழந்தையுடன் அவர்கள் உறங்கும் பகுதியிலையே தீ மூட்டப்பட்டுள்ளது.
சம்பவமன்று இரவு அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக குறித்த மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
காடாக காணப்பட்ட அரச காணி ஒன்றிலையே தற்காலிகமாக வீடு அமைத்து தான் வாழ்ந்து வந்ததாகவும், யாருடனும் காணி தொடர்பாகவோ அல்லது வேறு பிரச்சனைகள் தொடர்பாகவோ தனக்கு பகை இல்லை என தெரிவித்த குடும்பஸ்தர், குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் தனது வீட்டிற்கு தீ வைத்தமைக்கான காரணத்தை கண்டறிய உதவுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது, கருத்து தெரிவித்த குறித்த குடும்பஸ்தரின் மனைவி தங்களை கொலை செய்யும் நோக்குடனையே தமது வீட்டிற்கு விசமிகள் தீவைத்ததாகவும் பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |