தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக்கிளையில் இன்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும் மற்றும் வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற மேனாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிவில் சமூகம்
எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மத்தியிலும் அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும் விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள் கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும் சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும் மற்றும் பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை மத்திய செயற்குழுவின் தழுவு அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.
தோல்வியடைந்த மனநிலை
போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும்.
போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது.
எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச சமூகத்தோடு இணைந்தும் எமது இராஜதந்திர புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.
இணைந்த தீர்மானம்
கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும் மற்றும் சாதாரண பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.மேற்படி, இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின் போதும் போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும் ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும் மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும் எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால் மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ அவற்றைக் கவனமாக ஆராய்ந்து தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இலக்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும் பிரதேசக் கிளைகளும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து கள யதார்த்தத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |