கிழக்கில் தனியார் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகள்
கிழக்கிலுள்ள மக்களுக்கு தனியார் மருந்தகங்கள்(Community Pharmacy) ஊடாக பொதுமக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்முனை பிராந்தியத்தில் உள்ள தனியார் மருந்தகங்களின் தரங்களை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் "சிறந்த மருந்தகங்களின் செயன்முறை" தொடர்பான செயலமர்வு ஒன்று மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறந்த மருந்தகங்களின் செயன்முறை
குறித்த செயற்றிட்டமானது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு அம்பாறை மாவட்ட கரையோர மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பிராந்திய பணிப்பாளர் சகீலா இஸ்ஸதீன், சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத் ஆகியோர் தனியார் மருந்தகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், அது தொடர்பான சட்ட திட்டங்கள் பற்றியும் விரிவுரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன், சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத், பிராந்திய மருந்தாளர் எஸ்.இந்திரகுமார், உணவு, மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், குறித்த செயலமர்வில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |