அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம்கள் மட்டுமின்றி அதற்கு வெளியே உள்ள மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களும் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என கல்முனைத் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் இணைப்பாளரும், கல்முனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது சம்பந்தமாக அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் கட்சி தலைமைகள் கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசுக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளார்கள்.
ஆனால் தேசிய கட்சிகளை ஆதரிக்கும் கொள்கை உடைய நாம் எந்தவிதமான ஒப்பந்தமோ பேச்சுவார்த்தைகளோ இன்றி சஜித் பிரேமதாசாவை நிபந்தனை இல்லாத முறையில் ஆதரித்து வெற்றியடையச் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.
முஸ்லிம் அரசியல் தலைமைகள்
இலங்கை சுதந்திரத்தின் பின் தோன்றிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் நலன் கருதி எப்போதும் அரசியலில் தேசிய நீரோட்டத்துடன் சமாந்தரமாகச் சென்றார்கள். குறிப்பாக சேர் ராசிக் பரீட், பதியுத்தின் முஹம்மது, ஏ.சி.எஸ். ஹமீத்,ஏ.ஆர். மன்சூர், எம்.அப்துல் மஜித் போன்றவர்கள் பெரும்பான்மை மக்களின் மனங்களைவென்று அவர்களது விருப்பத்துடன் முஸ்லிம்களுக்குரிய சலுகைகளை பெற்றுக் கொடுத்தார்கள்.
குறிப்பாக தனியார் சட்டம், காதி நீதிமன்றங்கள், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, முஸ்லிம் பாடசாலைகளின் தோற்றம், நோன்பு விடுமுறை, முஸ்லிம்களுக்கென சமய - கலாச்சார அமைச்சு என பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்காக தனியான அரசியல் கட்சியை உருவாக்கி அவர் பேரம் பேசும் அரசியல் கோட்பாட்டில் நின்று முஸ்லிம்களுக்கு பல்வேறுபட்ட சலுகைகளையும் பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலிவில் துறைமுகம் என பல்வேறுபட்ட அபிவிருத்திகளும் தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தார்.
சஜித்திற்கு ஆதரவு
ஆனால் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் தலைவர் அஷ்ரப்பின் அகால மரணத்தின் பின் கடந்த 24 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் கட்சி தலைமைகள் பெற்றுக் கொடுத்த உரிமைகள் தான் என்ன என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
பணப்பெட்டி, அமைச்சுப் பதவிகள், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே தேர்தலின் போது வாக்களித்து வந்துள்ளனர்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் 50 விகிதத்திற்கு அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் எடுக்க வேண்டிய கட்டாயமான சூழலில் வடகிழக்கு வாழ் முஸ்லிம்கள் மட்டுமின்றி அதற்கு வெளியே உள்ள மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களும் தேசிய நீரோட்டத்தில் சமாந்தரமாகச் சென்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து வெற்றி அடையச் செய்ய முன் வரவேண்டும் என தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |