திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்
திருகோணமலையில் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (19) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்ற தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எட்டப்பட்ட தீர்மானம்
இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மத்திய நிலையம் ஒன்றின் அவசியம் குறித்து, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த யோசனையை, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டதோடு, திருகோணமலையில் அவற்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெனரல் கே.கே.எஸ்.கொத்தலாவல, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு பொறுப்பான பணிப்பாளர் யு.ஜி.செயிண்ட் கமகே, நிர்வாகப் பணிப்பாளர் எம்.டி.எஸ்.ஹேமச்சந்திரா, உதவி பணிப்பாளர் நிலானி அலுதகே உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




