செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது.
செம்மணி புதைகுழி
அதாவது செம்மணியில் மனிதப் புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன.
சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
குறிப்பாக தமிழ் பத்திரிகைகளில் அந்தச் செய்திகளை பார்க்கலாம். ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக குறிப்பிடப்படுகின்றன. யூடியுப் சனல் ஒன்றை நடத்தும் தரிந்து ஜயவர்தன என்பவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆராய்கின்றார்.
ஆனால் அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் பொறுப்பு
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தின்படி உங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன.
இதேவேளை அநீதிக்கு எதிரான ஜே.வி.பியின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அது தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் பல உள்ளன.
பல்வேறு மனிதப் புதைகுழிகள் மற்றும் துன்புறுத்தல் நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன செய்கின்றீர்கள்.
உங்களுடையவர்களின் மனித புதைகுழிகளைகூட இன்னும் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்திற்கு முன்னால் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது, பெயருக்கு கைக்கட்டிகொண்டு பார்த்துக்கொண்டிருக்கவா காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இருக்கின்றது. அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.
அதனை செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |