இலங்கையில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள விநோதமான நோய்! நீல நிறமாக மாறும் உடல்
இலங்கையில் முதன்முறையாக, Congenital Methemoglobinemia எனப்படும் மிக அரிதான நோயினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
அதன்படி, அநுராதபுரம் - மெதவச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிறந்த குழந்தை பிரிவு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.ஆர்.எஸ்.யு.சி.ரணவக்க(MRSUC.Ranawakka) குறிப்பிட்டுள்ளார்.
நோயின் தாக்கம்
இந்த நோயின் அறிகுறிகள் உடலில் கடுமையான நீலநிறம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.
மெதவச்சிய பிரதேசத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிசுப் பிரிவில் மருத்துவப் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்ட போது, இலங்கையில் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லாததால், குழந்தையின் இரத்த மாதிரிகள் ஜேர்மனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த நோய்க்கான மருந்துகள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நோய்க்கான காரணம் பெரும்பாலும் இரத்தம் சம்மந்தப்பட்ட திருமணங்கள் என்று நிபுணர் குறிப்பிட்டார், ஆனால் இந்த குழந்தையின் பெற்றோர்கள் அவ்வாறு இல்லை என சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்நாட்டில் இந்த நோய் இனங்காணப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஆனால், உலகில் சராசரியாக 1,00,000 குழந்தைகளில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |