ரமழான் மாத நோன்பு கஞ்சி தொடர்பில் விசேட கலந்துரையாடல்
ரமழான் காலத்தில் விசேடமாக உற்பத்தி செய்யப்படும் நோன்புக்கஞ்சி உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று(01) இடம்பெற்றுள்ளது.
சுகாதாரம்..
மேற்படி, கலந்துரையாடலில் ரமழான் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள், கஞ்சி விநியோகம் போன்ற விடயங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு விடயங்களை கவனத்திற்கொண்டு நடைமுறைப்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்தல், பிளாஸ்டிக் வாளிகளில் கஞ்சி வழங்குவதை முற்றாக நிறுத்துதல், தனிநபர் சுகாதாரம் பேணி கெப் மற்றும் ஏப்ரன் அணிதல், கஞ்சி தயாரிக்குமிடங்களை சுத்தமாக பேணுதல், ரமழான் காலத்தில் மட்டும் சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்பவர்கள் தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளல் என்பன இக்கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலின் பின் அனைத்து வகையிலும் பங்களிப்பு வழங்கப்படும் என பங்குபற்றிய அனைத்து நிறுவனத் தலைவர்களும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

