இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்
ஐக்கியமாக வாழும் சமூகங்கள் மத்தியில் இனவாதங்களை உருவாக்கும் இனவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக் கோவை (திருத்தம்) சட்டமூல குழு விவாதத்தின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சானது மிக முக்கியமான அமைச்சாகும்.
கொடுக்கப்பட்ட வாக்குகளின் நிலவரம்
நமது நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கும் தேசிய ஒருங்கிணைப்புக்கும் சிறந்த முறையில் இயங்கி நமது நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஒற்றுமையாகவும் உரிமையுடனும் வாழக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆளும் கட்சியினர் நமது நாட்டு மக்களுக்கு வழங்கிய மிக முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சுக்கு உள்ளது என்பதனை மறந்து விடக்கூடாது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரையும் அது தொடர்பான எதுவித செயற்பாடுகளை முன்னெடுக்காமல் மாறாக பயங்கரவாத தடைச் சட்டத்தினை பாவித்து அப்பாவி மக்களை கைது செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதானது இவ்வாட்சியின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையினை பலவீனப்படுத்தும் செயற்பாடாகும்.
எனவே, பயங்கரவாதச் சட்டத்தினை முற்றாக நீக்குவதற்கான ஏற்பாடுகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கினீர்கள். ஆனால் இதுவரையும் இவ்வாக்குறதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
அழகான தீவு புன்னகைக்கும் மக்கள்
எனவே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்ட 'அழகான தீவு புன்னகைக்கும் மக்கள்' எனும் தொலை நோக்குடன் உருவாக்கப்பட்ட செயற்றிட்டம் எனக் கூறுகின்றீர்கள்.
இத்திட்டத்தில் 18 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட போதும் இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளை இதுவரையும் உறுப்பினர்களாக நியமிக்காமல் தமிழ் , முஸ்லிம் சமூகங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத நிலையில் எவ்வாறு புன்னகைக்க கூடிய மக்களை உருவாக்க முடியும்?
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் விபரங்களை நான் நீதி அமைச்சரிடம் கேட்ட போது - இது தொடர்பான விளக்கங்களை பிரதி அமைச்சர் கூறுவார் என பதிலளித்தார்.
'க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்' பற்றி பிரதி அமைச்சர் கூறுகின்ற போது 'க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் எங்களின் அமைச்சின் திட்டம் கிடையாது எனவும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியினால் , ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் ஒரு திட்டம் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.
நமது நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு ஜனாதிபதி உட்பட யாராக இருந்தாலும் நமது தேசிய ஒற்றுமைக்கு சமத்துவமில்லாத செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது அதனை சமத்துவப்படுத்துகின்ற செயற்பாடுகளை இவ்வமைச்சு முன்னெடுக்க வேண்டும்.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் 'உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை நியமித்து இது தொடர்பான இறுதி தீர்மானத்திற்கு வருவது நல்லது' என நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் அன்று ஆளுங்கட்சியினர் 'இல்லை, அப்படி ஒன்றும் தேவையில்லை நாங்கள் தேர்தல் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்வோம்' எனத் தெரிவித்தனர்.
தேர்தலின் விளைவுகள்
அன்று நாங்கள் தெரிவித்த கருத்திற்கு ஆளும் கட்சியினர் செவி சாய்க்கவில்லை. ஆனால் இன்று உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் தேசிய மக்கள் சக்தி அத்தேர்தல் முறையின் விளைவுகளை எதிர்நோக்கி வருகின்றது.
ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை மதியாத செயற்பாடுகளுக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளும் ஆட்சியமைக்க முடியாத தடுமாற்றமும் எல்லோருக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது என்ற யதார்த்தத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை நியமித்து உள்ளுராட்சி தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை ஆலோசனை செய்வதற்கு இடமளிக்காத ஆளும் கட்சியினர் இன்று உள்ளுராட்சி தேர்தல் முடிந்த பின்னர், நிறைவேற்று அதிகாரத்தையும் 159 நாடாளுமன்ற பெரும்பான்மையையும் பயன்படுத்தி உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஜனநாயகத்திற்கும் தேர்தல் சட்டத்திற்கும் பெரும் சவாலான விடயமாகும்.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வட கிழக்கு மாகாணங்களில் பல மாவட்டங்களை வெற்றி கொண்டன. ஆனால் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அம்மக்கள் வழங்கிய ஆதரவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
நடைமுறையில் உள்ள உள்ளுராட்சி தேர்தல் முறையானது தேர்தலில் வட்டாரங்களையும், பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்ற கட்சியும் தோல்வியடையும் நிலையும், வட்டாரங்களில் தோல்வி அடைந்த கட்சியானது வெற்றியடையும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.
அதுமட்டுமன்றி உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு உறுப்பினருக்கு 25 இலட்சம் பணத்தினை வழங்கி ஆதரவு கேட்கும் அரசியல் கலாசாரத்தையும் இத்தேர்தல் முறை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |