புத்தளத்தில் 12 மணி வரை பதிவான வாக்குகள்: வெளியான தகவல்
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது நாடளாவிய ரீதியில் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 42 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருவதுடன் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
வாக்களிப்பு நடவடிக்கைகள்
இன்றைய தினம் தேர்தல் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் , வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை. மிகவும் சுமுகமான முறையில் மக்கள் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் ஐந்து தேர்தல் தொகுதிகளில் 470 வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், இன்று மாலை வாக்களிப்பு நிறைவு பெற்றவுடன் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையங்களாக தயார் செய்துள்ள புத்தளம் சென். ஆன்றூஸ் மத்தியக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் செய்னப் ஆரம்ப பாடசாலை என்பனவற்றிற்கு எடுத்துவரப்படவுள்ளது.
வாக்குகள் எண்ணும் பணிகள்
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் , ஆனமடு , சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் 6 இலட்சத்து 63 ஆயிரத்து 673 பேர் இம்முறை வாக்காளிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், 58 கணக்கெடுப்பு நிலையங்ளும், 8 தபால் மூல கணக்கெடுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14,967 அரச ஊழியர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூலமான வாக்களிப்புக்களை செய்துள்ளனர்.
தபால் மூல வாக்குகள் மாலை 7.00 மணிக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அது போன்று ஏனைய வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 8.00 மணயளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |