ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நிறைவேற்று சபையின் 90 வீதமானோரின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பலமான வலையமைப்பு
இந்தநிலையில், எமது கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட கட்சியின் அதிகாரிகள் மட்டுமன்றி சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 14 உறுப்பினர்களில் 08 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான வலையமைப்பு ஏற்கனவே செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |