கிழக்கு மக்களின் வாக்குகளை கொண்டு சூதாட அனுமதிக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முஸ்லிம் மக்களின் அதிலும் குறிப்பாக கிழக்கு மக்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தினை யார் மேற்கொண்டாலும், அது ராசா என்றாலும் எதிர்ப்போம் என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் நிபந்தனைகளை மற்றும் கோரிக்கைகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரி அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவரது அறிக்கையில், சகோதர்கள் என்ற அடிப்படையில் எல்லா அரசியல் தலைவர்களின் உறவும் எங்களுக்கு இருந்தாலும் கிழக்கு மக்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு சூதாட யாரையும், எந்த தலைவரையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கிழக்கு மக்கள்
கடந்த காலங்களில் சிறுபான்மை கட்சிகள் ஒன்று சேர்ந்து வடக்கு, கிழக்கை இணைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ஒப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்பவிருந்த கடிதம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் ஒன்றிணைத்து போராடித் தடை செய்தோம் அப்போராட்டத்தில் கட்சி தாண்டி பலரும் எங்களுக்கு உதவி செய்தனர்.
தற்போது எங்களது வாக்குகளை அதிகம் வைத்திருக்கும் கட்சிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை மக்கள் முன் வெளிக்காட்ட வேண்டும்.
இரகசியமாக பேணுவதற்கு அது என்ன இருட்டறை இரகசியமா? கிழக்கு மக்கள் ஒன்றும் உங்கள் அடிமையும் கிடையாது. அவர்கள் முட்டாள்களும் அல்ல. என தனது அறிக்கையில் எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |