கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய கடற்றொழிலாளர்கள், குறித்த கடற்கொள்ளையர்களை கைது செய்து அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கடற் கொள்ளையர்களிடமிருந்து கடற்றொழிலாளர்களின் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(19) மாளிகைக்காடு பாவா றோயாளி மண்டபத்தில் நடைபெற்ற போதே மேலுள்ள விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்களின் மீன்கள் மற்றும் சொத்துக்கள் திருடுவதாகவும், அவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்வதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
இதன்போது ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்ததுடன் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வை கோரியுள்ளனர்.
மேலும், சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது.
இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அவை நடந்த பாடில்லை. நாடாளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது.
தீர்வில்லா பிரச்சினை
நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் என பலரிடம் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது.
மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நட்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது.
இந்நிலையில், எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம். கடற்கொள்ளையர் திருடும் ஆதாரம், அவருக்கு உடந்தையான அதிகாரிகளின் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது.
ஒப்புக்கொண்ட திருடன்
கடற்கொள்ளையர் சின்னத்தம்பி தான் திருடுவதை கடந்த காலங்களில் ஒத்துக்கொண்டும் அவருக்கு முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
கடற்கொள்ளையர் சின்னத்தம்பியை மட்டுமல்ல உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளும், அவர்களின் மீன்களை வாங்கும் வியாபாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்வாவாவின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்ஜே.ஜே. ஜஸ்டினா முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதுடன் கருத்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








