கல்முனை மாநகர சபைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு
கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றம்சாட்டி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அருகில் நேற்று(01) நடைபெற்றுள்ளது.
பிரதான வீதிக்கு குறுக்காக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் குறித்த பிரச்சினைக்கான சமரச முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மாநாகர சபைக்கு எதிரான போராட்டம்
மேலும், இதன்போது கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற ஆண்கள், பெண்கள் உட்பட சிறுவர்கள் பங்கேற்றதுடன் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய சுலோகங்களை ஏந்தி நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
பின்னர் பொலிஸாரின் ஆலோசனைக்கமைய குறித்த போராட்டம் நிறைவு செய்யப்பட்டதுடன், உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வொன்றை பெற ஆவணம் செய்ய நடவடிக்கை எடுக்க கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர இப்பகுதியில் மாநகர சபையினராலும் பொதுமக்கள் சிலராலும் கொட்டப்படும் குப்பைகளினால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது மற்றும் துர்நாற்றம் வீசுகின்றது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் முதல் வயது வந்தோர் வரை சுவாச பிரச்சினைக்கு உள்ளாவதுடன் இதன் காரணமாக யானைகளின் அச்சுறுத்தலும் தொடர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






