பொதுமக்களுக்காக எந்நேரமும் திறந்திருக்கும் எதிர்க்கட்சி அலுவலகம் : சஜித் பெருமிதம்
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகம், பொதுமக்களுக்காக எந்நேரமும் திறந்திருக்கும் என்று சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் குறைகளைச் செவிமடுக்க..
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் ஏராளம் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த போதும், அதிகாரம் கிடைத்தவுடன் பொதுமக்களை மறந்துவிட்டது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி, தேங்காய், உப்பு என்று எல்லாப் பொருட்களுக்கும் இன்று தட்டுப்பாடு நிலவுகின்றது.
மறுபக்கத்தில் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்து கொள்ள முடியாது கமக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக அனைத்து தரப்பு மக்களும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துன்பங்களை, துயரங்களை செவிமடுக்க அரசாங்கம் தயாராக இல்லை.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் பொதுமக்களுக்காக எந்நேரமும் திறந்திருக்கும். பொதுமக்களின் குறைகளைச் செவிமடுக்க, அவற்றைத் தீர்த்து வைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |