கிண்ணியாவில் தாதியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று(17), 3 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அதேவேளை, மதிய நேரத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
காலை 10 மணி முதல் ஆரம்பமான இவர்களின் பணி புறக்கணிப்பு, மதியம் ஒரு மணி வரை நீடித்துள்ளது.
புறக்கணிப்பு
இதன் காரணமாக, அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த, எனைய அனைத்துப்பிரிவுகளும் தமது அன்றாட செயற்பாட்டினை இழந்திருந்தன. வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாததால், இவ்வாறான பணி புறக்கணிப்புக்கு தாங்கள் ஆளாக்கப்பட்டிருப்பதாக தாதியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும், ஒப்புக்கொண்டபடி தாதியர் சேவையில் பதவி உயர்வு பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், மேலதிக நேர கொடுப்பனவுகள் 1/200 மற்றும் விடுமுறை தின கொடுப்பனவுகள் 1/30 ஆக மாற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை தொடர்பாக நிதி அமைச்சகத்துடனான பேச்சுவார்த்தை ஒப்புக்கொண்டபடி நடக்கவில்லை.
இதன் காரணமாக தாதியர் சேவை கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது எனவும் தாதியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |