மோசமான திருடன் யார்?
ஹஜ்ரத் அப்துல்லாஹி அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மனிதர்களில் மிக மோசமான திருடன் தனது தொழுகையில் திருடுபவனேயாவான் என ரசூலில்லாஹி (ஸல்) அருளிய போது சஹாபாக்கள், ”தொழுகையில் திருடுவது எப்படி, நாயகமே?” என்று கேட்டார்கள்.
அதற்கு ”அதனுடைய ருகூவு, சுஜூதை சரிவர நிறைவேற்றாமலிப்பதுதான்” என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
இக்கருத்தானது பல ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ளது, முதற்கண் திருட்டுத் தொழில் எவ்வளவு கேவலத்திற்குரியது, திருடனை எவ்வளவு கேவலமாக பார்க்கப்படுகிறது.
பிறகு அதிலும் ருகூஉ சுஜூதை பூரணமாக நிறைவேற்றாத இச்செயலை மிகக் கெட்ட திருட்டு என்பதாக இங்கு கூறப்பட்டது.
ஹஜ்ரத் அபூதர்தா(ரலி) அவர்கள் நவிலுகிறார்கள். ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் வானத்தின் பக்கம் தமது பார்வையை உயர்த்தி ”இல்மு உலகிலிருந்து உயர்த்தப்பட்டு போகும் நேரம் எனக்கு காட்டப்பட்டுள்ளது” என அருளினார்கள்.
ஹஜ்ரத் ஜியாத்(ரலி) என்னும் சஹாபி ”யா ரசூலல்லாஹ்! இல்மானது எங்களிடமிருந்து எவ்வாறு எடுக்கப்பட்டுபோகும்? நாங்களோ குர்ஆன் ஷரீபை ஓதிக்கொண்டிருக்கிறோமே! என்று கேட்டதற்கு
நபி(ஸல்) அவர்கள் ”நான் உம்மை சிறந்த அறிவாளி என்றல்லவா எண்ணியிருந்தேன், இந்த யூத கிறிஸ்தவர்களும் கூட தவ்ராத்தையும், இஞ்ஜீலையும் கற்றுக்கொண்டும், கற்றுக்கொடுத்துக் கொண்டும் தானே இருக்கின்றனர், அவ்வாறிருந்தும் என்ன பலன் உண்டாயிற்று?” என்று கூறினார்கள்.
ஒரு ஹதீஸில், ”ருகூஉ சுஜூது ஒழுங்காக நிறைவேற்றப்படாத அத்தகைய தொழுகையின் பக்கம் அல்லாஹ் ஏறிட்டும் பார்ப்பதில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு ஹதீஸில், ”ஒரு மனிதர் அறுபது ஆண்டு காலமாக தொழுதிருப்பார். ஆனால் அவருடைய தொழுகைகளில் ஒன்று கூட கபூலாகியிருக்காது. ஏனெனில் அவர் ருகூவைச் சரிவர செய்திருந்தால் சுஜூதை சரியாக செய்திருக்க மாட்டார், சுஜூதை சரிவர செய்திருந்தால் ருகூவை சரியாக செய்திருக்க மாட்டார் என அருளப்பட்டுள்ளது.
தொழுகையில் நிலை நிற்கும் போது சஜ்தாவின் இடத்தில் பார்வை செலுத்துவதும், ருகூவின் போது பாதங்களின் மீது பார்வை செலுத்துவதும், சஜ்தாவில் மூக்கந்தண்டின் மீதும், மேலும் இருப்பில் அமரும்போது கைகளின் மீதும் பார்வையை செலுத்துவது தொழுகையில் உள்ளச்சத்தை உண்டு பண்ணுகிறது, இதனால் தொழுகையில் மனஓர்மை பாக்கியமாகிறது.