நோயைப் படைத்தவனே மருந்தையும் படைத்தான்
”நோயை இறக்கியவனே மருந்தையும் இறக்கினான்” என்ற நபிகளாரின் கூற்றை ஒத்த பல்வேறு நபிமொழிகள் வந்துள்ளன.
அவற்றுள் ஒன்று ஹிலால் பின் யசாஃப்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழியாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை நலம் விசாரிக்க சென்றார்கள். அப்போது அவர்கள் ”மருத்துவரை அழைத்து வர ஆள் அனுப்புங்கள்” என்று கூறினார்கள். அச்சமயம் ஒருவர் ”அல்லாஹ்வின் தூதரே! தாங்களா இவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் ”ஆம்! திண்ணமாக மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் மருந்தை இறக்காமல் நோயை இறக்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
”நிவாரணத்தையும் நோயையும் இறக்குதல்” என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
ஒரு குழுவினர் மருந்தை இறக்குதல் என்றால அது குறித்த அறிவை மனிதர்களுக்கு வழங்குதல் ஆகும். மாறாக மருந்தையே கொடுப்பதல்ல. ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள், எல்லாவித நிவாரணத்தையும் நோயையும் இறக்குதல் எனப்பொதுவாகத்தான் கூறியுள்ளார்க்ள.
மேலும் மனிதர்களும் பெரும்பாலானோருக்கு என்ன நோய்க்கு என்ன மருந்து என்பது குறித்து எதுவும் தெரியாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அம்மருந்தை அறிந்தோர் அறிந்து கொண்டார், அறியாதோர் அறியாமலே போய்விட்டார்.
ஒரு குழுவினர் கூறுவது: நோயையும் மருந்தையும் இறக்குவதென்றால் பூமியில் அவ்விரண்டையும் உண்டாக்கி வைப்பது என்று பொருள்.
மற்றொரு குழுவினர், நோய், நிவாரணம் உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென நியமிக்கப்பெற்றுள்ள வானவர்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக இறக்குதல் என்று பொருள்.
மூன்றாவது குழுவினர், வானத்திலிருந்து மழையைப் பொழியச்செய்வதன் மூலமே அல்லாஹ் நோய்களையும் மருந்துகளையும் இறக்குகிறான். அந்த மழைநீர் மூலமே பூமியிலுள்ள மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கான உணவுகள், மருந்துகள், நோய்கள், அவற்றிற்கான கருவிகள், அதற்கான காரணங்கள் முதலிய அனைத்தும் உண்டாகின்றன.
அந்த மழைநீரோ மிக உயர்ந்த பொக்கிஷங்களையெல்லாம் உண்டாக்குகிற வலிமை வாய்ந்ததாகும். அந்த நீர் மலைகளிலிருந்து இறங்குகின்றது. அதிலிருந்து ஓடைகளும் நதிகளும் உற்பத்தியாகின்றன.
அவற்றின்மூலம் கனி வகைகள் கிடைக்கின்றன. ஆகவே வானிலிருந்து இறங்குகின்ற மழைநீரே இத்தனைக்கும் காரணம் என்பதால் மற்ற பொருள்களை விட ”மழைநீரை இறக்குதல்” என்பதே மிகப்பொருத்தமான பொருளாகும்.
இது உயர்ந்தோன் அல்லாஹ்வின் முழுமையான நுண்ணறிவுக்கும் இறைத்தன்மைக்கும் அசைக்கமுடியாத சான்றாகும்.
ஏனென்றால் அவன் நோய்களால் தன் அடியார்களை சோதிப்பதைப் போலவே அவர்களுக்கு எளிதான முறையில் அவற்றிற்கான மருந்துகளை வழங்கி உதவியும் செய்கிறான்.
பாவங்களை கொண்டு அவர்களை சோதிப்பதைப் போலவே அதற்கு எதிராக பாவமன்னிப்பு எனும் வாசலை திறந்து அவர்களுக்கு உதவி செய்கிறான்.
ஆக அல்லாஹ் எதையேனும் வைத்து மனித இனத்தை சோதிக்கும் போதெல்லாம் அந்த சோதனையை தடுத்துக்கொண்டு அவனிடம் அவர்கள் உதவி தேடுவதற்கான வழியை அவன் வழங்காமல் இருப்பதில்லை.