தொழுகையில் கவனிக்க வேண்டியவை
தொழுகையில் பன்னிரண்டாயிரம் அம்சங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்தஆலா பன்னிரெண்டு விஷயங்களில் அமைத்துள்ளான்.
தொழுகை பூரணத்துவம் பெறவும் அதன் பூரண பலன் அடையவும் அந்த பன்னிரெண்டு விஷயங்கள் வருமாறு.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ”இல்முடன் செயலாற்றப்பட்ட குறைவான அமலும் அறியாமையால் ஆற்றப்பட்ட அதிகமான அமல்களை காட்டிலும் சிறந்தது என அருளியுள்ளார்கள்.
முதலாவது இல்மு, இரண்டாவது ஒளு, மூன்றாவது உடை, நான்காவது நேரம், ஐந்தாவது கிப்லாவை முன்நோக்குதல், ஆறாவது நிய்யத்து, ஏழாவது முதல் தக்பீர், எட்டாவது தொழுகையின் நிலை, ஒன்பதாவது குர்ஆன் ஷரீப் ஓதுதல், பத்தாவது ருகூஉ, பதினோராவது சஜ்தா, பன்னிரெண்டாவது அத்தஹியாத் இருப்பில் உட்காருவது.
மேலும் இவை அனைத்தும் இக்லாஸை கொண்டு பூரணத்துவம் பெறுகின்றன. இந்த பன்னிரெண்டு விஷயங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று பிரிவுகள் இருக்கின்றன.
இல்மு
* பர்ளுவின் சுன்னத்துகளை தனித்தனியாக பிரித்தறிவது
* ஒளுவிலும் தொழுகையிலும் எத்தனை விஷயங்கள் பர்ளு எத்தனை சுன்னத்து என்பதை அறிவது
* ஷைத்தான் எந்தெந்த முறையில் சூழ்ச்சி செய்து தொழுகையில் கெடுதியை உண்டு பண்ணுகிறான் என்பதை அறிவது
உளூ
* புற உறுப்புகளை பரிசுத்தப்படுத்துவதே போன்று உள்ளத்தையும் கபடம், பொறாமை முதலியவற்றிலிருந்து தூய்மைப்படுத்திக் கொள்வது
* புற உறுப்புகளை பாவங்களை விட்டு விலக்கி பரிசுத்தமாக வைத்திருத்தல்
* உளூவில் கடப்பும், விரயமும் செய்வதையோ அல்லது அளவைவிட குறைவாக செய்வதையோ தவிர்த்தல்
ஆடை
* அது ஹலாலான வருமானத்தால் பெறப்பட்டதாக இருப்பது
* சுத்தமாக இருப்பது
* சுன்னத்தான முறைப்படி கரண்டைக்காலை மூடாமலும் தற்பெருமை பகட்டுக்காக அணியாமலும் இருப்பது
நேரம்
* வெயில் நட்சத்திரம் போன்றவற்றின் நேரங்களை அறிந்து வைத்திருப்பது
* பாங்கு சொல்லப்படும் நேரம் பற்றி கவனம் வைத்தல்
* சில சமயம் தம்மை அறியாமலேயே நேரம் தவறிப் போகாமலிருக்க மனதில் எப்போதும் தொழுகையின் வேளையை பற்றி நினைவு வைப்பது.
கிப்லாவை முன்நோக்குதல்
* வெளிரங்கமான உடலால் கிப்லா திசையில் நிற்பது
* உள்ளத்தால் அல்லாஹ்வின் பக்கம் தியானம் செலுத்துவது
* ஏனெனில் உள்ளத்தின் கஃபா அவனேயாவான் எஜமானனான அல்லாஹ்வுக்கு முன்பாக எவ்வாறு உடல் முழுவதையும் முன்னோக்கி வைத்திருக்க வேண்டுமோ அவ்வாறு முன்னோக்கி நிற்பது
நிய்யத்து
* எந்த தொழுகையை நிறைவேற்றுகிறோம் என்பதை நினைத்தல்
* அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நிற்பதாகவும், அவன் தன்னைப் பார்ப்பதாகவும் எண்ணுதல்
* உள்ளத்தின் நிலைமையைக் கூட அவன் அறியக்கூடியவன் என எண்ணுதல்
முதல் தக்பீர்
* தக்பீரை வார்த்தை சுத்தமாக மொழிவது
* இரு கைகளையும் காதுகள் வரை உயர்த்துவது
* அல்லாஹ் அக்பர் என நாவால் மொழியும் போது அல்லாஹ்வின் மகத்துவமும் கண்ணியமும் உள்ளத்திலும் பிரசன்னமாய் இருப்பது
தொழுகையின் நிலை
* பார்வையை சஜ்தாவின் இடத்தில் செலுத்துவது
* வேறு எப்பக்கமும் கவனம் செலுத்தாமல் இருப்பது
குர்ஆன் ஷரீப் ஓதுதல்
* சரியான முறைப்பிரகாரம் ஓதுவது
* அதன் பொருளை சிந்திப்பது எதை ஓதுகிறோமோ அதன்படி செயல்படுவது
ருகூஉ
* ருகூவின் சமயம் முதுகை கீழே தாழ்த்தாமலும் மேலே உயர்த்தாமலும் முற்றிலும் நேராக வைத்தல்
* கை விரல்களை விரித்து முழங்கால்களை பிடித்தல்
* ருகூவின் தஸ்பீஹ்களை கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் ஓதுதல்
சஜ்தா
* ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராக வைப்பது
* முழங்கைகளை மேலுயர்த்தி வைப்பது
* தஸ்பீஹ்களை கண்ணித்துடன் ஓதுவது
அத்தஹியாத் இருப்பில் உட்காருவது
* வலது காலை நட்டுவைத்து இடது காலை படுக்க வைத்து அதன் மீது அமருவது
* அத்தஹியாத்தை கண்ணியமாகவும் அர்த்தத்தை கவனத்தில் கொண்டும் ஓதுவது
* மலக்குகளும் வலப்பக்கம் இடப்பக்கம் உள்ளவர்களுக்கும் நிய்யத்து ஸலாம் கொடுப்பது