ஜமாஅத் தொழுகையின் சிறப்புகள்
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை ஹஜ்ரத் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஜமாஅத்துடன் தொழுவது தனியாக தொழுவதைக் காட்டிலும் இருப்பத்தேழு மடங்கு அந்தஸ்தில் உயர்ந்ததாகும்.
ஒருவர் தொழுகின்றார் என்றால் நன்மையை நாடியே தொழுகின்றார். அவ்வாறென்றால் அவர் வீட்டிலே தொழுவதற்கு பதிலாக மஸ்ஜித்திற்கு சென்று ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுது கொள்வதில் எந்தவித சிரமமும் கஷ்டமும் இல்லை.
அத்துடன் இத்துணை அதிக நன்மைகளும் கிடைத்து விடுகின்றன. ஒரு ரூபாய்க்கு இருபத்தேழு அல்லது இருபத்தெட்டு ரூபாய் லாபம் கிடைக்கிறதென்றால் அதனை யார் தான் விட்டுவிடுவார்கள்?
ஆனால் தீனுடைய விஷயத்தில் மட்டும் இத்தனை பெரும் லாபமும் புறக்கணிக்கப்படுகிறதென்றால் இதற்கான காரணம் நமக்கு தீனை பற்றிய அக்கறையேதும் இல்லை என்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
தீனில் லாபம் எங்களுடைய பார்வையில் லாபமாக தோன்றுவதில்லை. உலக வியாபாரத்தில் ஒரு ரூபாய்க்கு ஐந்து பைசா அல்லது பத்து பைசா லாபம் கிடைக்கிறதென்றால் அதை அடைந்து கொள்ள பகலெல்லாம் படாத பாடுபடுகின்றோம்.
ஆனால் மறுமையில் வியாபாரத்தில் இருபத்தேழு மடங்கு அதிக லாபம் கிடைப்பதோ எங்களுக்கு பெரும் துன்பமாக தோன்றுகிறது.
ஜமாஅத்துடன் தொழுகைக்கு சென்றால் கடையில் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என நினைக்கிறோம், கடையை மூட வேண்டிய சிரமம் இருப்பதாக கூறுகிறோம்.
ஆனால் எவர்களிடம் அல்லாஹ்தஆலாவின் மகத்துவம் இருக்கிறதோ அல்லாஹ்வின் வாக்குறுதிகளின் மீது பூரண நம்பிக்கை இருக்கிறதோ, அவனால் வழங்கப்படும் நற்கூலி நன்மைகளுடைய மதிப்பு இருக்கிறதோ அவர்களிடம் இந்த சாக்குபோக்குகள் எவ்வித முக்கியத்துவமும் பெறமாட்டாது.
இதனை தான் தனது திருமறையில்,
சில மனிதர்கள் அவர்களுடைய வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை திக்ரு செய்வதை விட்டு அவர்களை திருப்பி விடாது
என்று கூறப்பட்டுள்ளது.