முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி இன்று (10) காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வருகை தந்து தமக்கான பதிலை தருமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும் வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் பாடசாலை பெற்றோர்களில் இருந்து ஐவரை பாடசாலைக்குள்ளே கலந்துரையாட வருகை தருமாறு அழைத்ததன் அடிப்படையில் பெற்றோர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
பெற்றோர் விசனம்
இதன்போது தமது கோரிக்கைகளுக்கு சரியான பதிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் தரவில்லை எனவும் அவர் பிரச்சினைகளை சமாளிப்பதாக இருந்ததாகவும் வலயத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து தீர்வை பெற்று தருமாறு கோரிய போதும் உரிய வகையில் தமக்கான பதில் வழங்கப்படாத நிலையில் அவருடைய பதில்கள் திருப்தியற்றதாக உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்து பாடசாலையில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தமக்கான உரிய பதிலை உரிய தரப்புகள் வழங்காத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




