உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இலங்கை வரவுள்ள மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு குழுக்கள் இலங்கையில் நிலைகொண்டுள்ளன.
இந்தியப் பாதுகாப்புக் குழு சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்துள்ளதோடு மோடியின் பாதுகாப்பிற்காக பல வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோடியின் வருகையின் போது நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறைத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து இந்தியப் பாதுகாப்புக் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோடி நடத்தவுள்ள பேச்சுவார்த்தை
நரேந்திர மோடி இன்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
இந்த விஜயத்தில் ஒட்டுமொத்த இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை கணிசமாக மேம்படுத்துவதுடன், எரிசக்தி, வர்த்தகம் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் மோடி நடத்தவுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கொழும்பில் சீனா தனது இராணுவ செல்வாக்கை அதிகரிக்க இடைவிடாமல் முயற்சிக்கும் பின்னணியில், இரு தரப்பினரும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு பெங்கொக்கில் நடைபெற்ற BIMSTEC (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிறகு மோடி இலங்கைக்கு வருகைத்தருவதால் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனையை ஆழப்படுத்தும் விடயங்கள் இங்கு கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்திற்கான கூட்டாண்மை
பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது, என்ற கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான கூடுதல் வழிகாட்டுதலை வழங்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்று இரு நாடுகளின் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் மோடி வெளிப்படத்தியிருந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதியின் புதுடில்லி பயணத்தின் போது சில கூட்டு ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நாளை இடம்பெறவள்ள மோடி - அநுர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கையின் கடனை மறுசீரமைப்பது உட்பட பல இருதரப்பு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் உறுதிப்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படகிறது.
கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பில், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அது முதல் முறையாக கையெழுத்திடப்படுகிறது என்றும் கூறினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா-இலங்கை பாதுகாப்பில் ஒரு பெரிய முன்னேற்றப் பாதையை குறிக்கும்.
முன்மொழியப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த விரிவான விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் பின்னணியில் இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் பயணம் முதலீடுகளை ஊக்குவிப்பது மற்றும் இணைப்பை ஆழப்படுத்துவது - இயற்பியல் இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி இணைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இலங்கை புதிய அரசாங்கத்தால் வரவேற்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நரேந்திர மோடி ஆவார்.
மோடி கடைசியாக 2019 இல் இலங்கைக்கு பயணம் செய்தார்.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கைக்கு நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.
"பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி விவாதிப்போம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளை நான் எதிர்நோக்குகிறேன்” என்று மோடி ஒரு X பதிவில் கூறினார்.
அநுர வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பில் அநுர வெளியிட்ட அறிக்கையில்
“இந்தியாவில் எனது வெற்றிகரமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, எங்கள் நீடித்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கமைய இருதரப்பு கூட்டாண்மையில் ஒரு மைல்கல்லாக இந்த விஜயம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் மோடி இலங்கையின் பல அரசியல் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
அத்தோடு, ஏப்ரல் 6 ஆம் திகதி, மோடியும் அநுரவும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான அனுராதபுரத்தில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இரண்டு திட்டங்களையும் கூட்டாகத் தொடங்கி வைக்கவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |