இஸ்ரேலின் சபாத் இல்ல பிரச்சனை குறித்து முக்கிய தீர்மானம்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் இடையிலான சந்திப்பு நேற்று (11) மாலை அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், அம்பாறை மாவட்டம் பொத்துவில் - அறுகம்பே பிரதேசத்தில் இயங்கும் சபாத் இல்லம் குறித்து விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை, சட்டரீதியான அனுமதி பிரச்சினைகள் மற்றும் அந்த இல்லத்தை மூடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சபாத் இல்ல பிரச்சனை
மேலும், பொத்துவில் பிரதேச சபை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளுகையில் உள்ளதையும், அதன் தவிசாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் என்பதையும் அமைச்சர் அறிந்து கொண்டார்.
அத்துடன், சபாத் இல்லம் அருகிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடம் இருப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
மேலும் குறித்த சந்திப்பில், அந்தப் பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடிவமைத்து, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர் விஜித ஹேரத், சபாத் இல்லத்தை மூடுவது தொடர்பான தீர்மானத்தை பொத்துவில் பிரதேச சபை நிறைவேற்றினால், அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
மேலும், பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடத்தை உடனடியாக அகற்றுவதாகவும் உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |