அர்ச்சுனா இராமநாதனின் இனவாத கருத்துக்களுக்கு கண்டனம்
முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை என கூறிய அர்ச்சுனா இராமநாதனின் இனவாத கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம் என அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று(24) நாடாளுமன்றத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரந்தும் அர்ச்சுனா, முஸ்லிம்களும் தமிழர்கள் தான். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட அறிக்கை
இந்த நிலையில், அர்ச்சுனா எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் மீஸான் பௌன்டேசனினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் முனைவது பல்லினம் வாழும் சோஷலிச ஜனநாயக குடியரசு நாடான இலங்கையில் எப்போதும் நடக்காது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தான் நாடாளுமன்றம் சென்ற முதல் நாளிலிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, அர்ச்சுனா ராமநாதன் பற்றி கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்து வருவதை நாட்டு மக்கள் அறியாமலில்லை.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு நாட்டின் இறையாண்மையையும், அரசியலமைப்பையும் மீறும் விதமாக நடப்பது அர்ச்சுனா ராமநாதன் போன்றவர்களுக்கு பொருத்தமில்லை.
இந்த உரைக்காக அவர் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி இந்த கருத்தை மீளப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் மௌனத்தை கலைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை கண்டிக்க வேண்டும் என்பதுடன் அவரது உரையின் இனவாத கருத்தை நாடாளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |