அம்பாறையில் ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு
அம்பாறை (Ampara)- சம்மாந்துறையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு "ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு" நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வானது இன்று (19) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் நுண்ணறிவு விளக்கங்கள் இடம்பெற்றதுடன் விவாதங்கள் மற்றும் கேள்வி பதில் அமர்வுகளும் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
போதைப்பொருள் மற்றும் அதன் அழிவுகரமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த செயலமர்வில் ஊடகவியலாளர்களின் பங்கேற்பானது போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான எங்களின் கூட்டு முயற்சிகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தநிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ராசிக் நபாயிஸ், ஏ.ஜெ.எம். இக்ராம் உட்பட ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |