வாகன இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட வாகனத்தை பதிவு செய்ய முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர் மோட்டார் வாகனச் செலவு, காப்பீடு மற்றும் இறக்குமதி கட்டணங்கள் மற்றும் தாமதக் கட்டணங்களில் 45 சதவீதத்தை பதிவு செய்யும் போது செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி
விற்பனை நோக்கத்திற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை, இறக்குமதியாளரின் பெயரிலோ, வியாபாரத்தின் பெயரிலோ அல்லது பணிப்பாளர்களின் பெயரிலோ பதிவு செய்வதையும் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள், அவர் இறக்குமதி செய்த மொத்த கார்களில் 25 சதவீதத்தை பதிவு செய்யாவிட்டால், 36 மாதங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதையும், வாகனங்களை பதுக்கி வைப்பதையும் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |