சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மின்வேலிகள் அமைப்பு
மேலும் தெரிவிக்கையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024ல், வனவளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது. 2
024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
மேலும், நம் நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ள யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், 2023ஆம் ஆண்டு முதல் மனித மற்றும் காட்டு யானைகளின் உயிரிழப்பைக் குறைக்க முடியும்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள 5390 கிலோமீற்றர் மின்வேலிகளை பராமரிக்க நான்காயிரத்து எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 13 வருடங்களின் பின்னர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டில் யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், வனவிலங்கு குற்றங்களை தடுக்கும் வகையில், தாவரங்கள் மற்றும் விருட்சங்கள் சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |